முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் கேரள அரசுக்கு துணை போகும் திமுக அரசை கண்டித்தும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தென்தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையாக இருக்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த சில நாட்களாக கேரள அரசாங்கம் பல்வேறு தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது.

மேலும் கடந்த மாதம் 29ஆம் தேதி அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தமிழக அரசின் ஒப்புதலோடு கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிட்டது. தமிழக விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தென் தமிழகப் பகுதியில் தொடர்ச்சியாக அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் போன்றவை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கம்பத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி திடல் பகுதியில் கேரளா மற்றும் தமிழக அரசை கண்டித்து கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,
முல்லைப் பெரியாறு அணையில் முழு உரிமை தமிழகத்திற்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் தற்போது கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரள பகுதிக்கு நீர் திறந்துவிடப்பட்டதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக மிகப்பெரும் சட்டப்போராட்டம் நடத்தி அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்று பெற்றுத்தந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசு காக்க தவறிவிட்டது.
மேலும் உச்சநீதிமன்றம் நவம்பர் 11ஆம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 139.5 அடியாக தேக்கி வைக்கலாம் என்று உத்தரவிட்ட நிலையிலும் அதனை மதிக்காமல் கேரள அரசும் தமிழக அரசும் செயல்பட்டிருக்கிறது.
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அணையில் இருந்து தமிழக அதிகாரிகள் தான் நீரைத் திறந்து வைத்தார்கள் என்று ஒப்புக்காக கூறுகிறார். இதன் மூலம் தமிழகத்தின் உரிமை கேரளாவிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் அதிமுக தலைமையிலான அரசு 2014 -2016 – 2018 என மூன்று முறை 142 அடி வரை தண்ணீரை உயர்த்தி காட்டி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி உள்ள தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும் 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் பயன்பட்டு வருகிறது. ஆகையால் திமுக அரசாங்கம் அதிமுக அரசு பெற்றுத்தந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பான 142 அடி வரை தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மக்களவை உறுப்பினர் உறுப்பினர் O.P.ரவீந்திரநாத் குமார், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.