• Wed. Oct 16th, 2024

கருணாநிதிக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடிக்கும் -முதலமைச்சர் ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

ByA.Tamilselvan

May 3, 2022

ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம்.
அவர்களது உற்ற தோழனாக, சிறுபான்மையினரின் காவலராக, அவர்களில் ஒருவராகவே, கருணாநிதி விளங்கினார். எண்ணற்ற நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக நிறைவேற்றினார்.கருணாநிதிக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்கவல்லது. அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான், தி.மு.க. அரசும் சிறுபான்மை மக்களின் அரணாகத் தொடர்கிறது.
பெரும்பான்மைவாதமும், மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாக தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும், சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்கு துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் நமது அரசின் சார்பில், மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *