• Wed. Apr 24th, 2024

துப்புரவு பணியாளர்களை வேலைக்கு எடுப்பது நகராட்சி அதிகாரிகளின் வீட்டு வேலை செய்யவா..??

குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை நகராட்சி அதிகாரிகளின் வீட்டுவேலைகளில்  ஈடுபடுத்துவதாக  பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தை மையமாக வைத்து செயல்படுகிறது குழித்துறை நகராட்சி .இந்த நகராட்சியில் துப்புறவு அலுவலராக ஸ்டான்லி குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேற்படி நகராட்சி தான் இவருடைய சொந்த ஊர். அவருடைய வீட்டிற்கும் நகராட்சி அலுவலகத்திற்கும் அரை கிலோ மீட்டர் தூரம் இடைவெளி தான்.  சொந்த இடத்தில் பணியாற்றி வருவதால் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும்  நிர்வாகத்தையும் மதித்து, மக்கள் பணியாற்றுவதில் இவரது கவனம் இல்லை. நகராட்சியில் சுகாதார சீர்கேடு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படக்கூடிய சீர்கேடு, தினசரி மார்க்கெட்டில் இருந்து வரக்கூடிய கழிவுகள் முறையான துப்புரவு பணி நடைபெறாமல் உள்ளாக கருதப்படுகிறது.

ஸ்டான்லி குமார்

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடம் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டதால் சுகாதார பிரிவு அலுவலகத்தினுள் இருக்கக்கூடிய  கழிப்பிடத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.  இதனால் கோபமுற்ற துப்புரவு அலுவலர் ஸ்டான்லி, நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் என்றும் பாராமல் நாகரீகமற்ற முறையில் அவர்களை கடுமையான  வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேற்படி சம்பவம் பற்றி நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.  இதனால் ஆகஸ்ட் 1 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் துப்புரவு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைக்க கூட்டத்தில் சலசலப்பும் கூச்சலும் ஏற்பட்டது. அதிகாரிகள்  முறையாக பதிலளிக்காத காரணத்தால் இறுதியில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்களை அலுவலர் ஸ்டான்லி தன்னுடைய வீட்டு வேலைகளுக்கு  பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் எனவும் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் படம் அனுப்பி வேலை நடப்பதாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் 97வது வாவுபலி பொருட்காட்சியில் துவக்க விழா நிகழ்ச்சியை ஸ்டான்லி திட்டமிட்டு  புறக்கணித்ததாகவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த மாவட்டத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி  தொடர்ச்சியாக நடத்தாமல் புறக்கணித்துள்ளார் ஸ்டான்லி. மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பார்வையில் பொதுமக்கள் கொண்டு வரும் கோரிக்கைகளை பற்றி துப்புரவு அலுவலரிடம் கேட்டால் அது பற்றி முறையாக பதிலளிக்காமல் மக்கள் பிரதிநிதிகளை  அவமதிக்கும் படியாக நடந்து கொண்டுள்ளார்.  இதனால் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுவதற்கு காரணமாக செயல்படுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து சொந்த ஊரில் பணி செய்வதால் நெகிழி இல்லாத நகராட்சியாக உருவாக்கம் திட்டத்திற்கு இடையூறு ஏற்படும் விதமாக பெருமுதலாளிகள் இடமும், வர்த்தக அமைப்புகளிடமும் பல லட்சம் பேரம் பேசுவதாக  வியாபாரிகள் தெரிவிக்கிறனர்.

துப்புரவு அலுவலர் ஸ்டான்லி கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றியபோது  அனைவருக்கும் கழிப்பிடம் கட்டும் திட்டம், கட்ட படாமலே பல லட்சம் கையாடல் செய்ததாக கோவில்பட்டி நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட  சூழ்நிலையில் குழித்துறை நகராட்சியில் மக்கள் நலன் சார்ந்த பணிகள் நடைபெற வேண்டும் என்றால் துப்புரவு அலுவலர் ஸ்டான்லி குமார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழித்துறை நகர்மன்ற உறுப்பினர் இரத்தின மணிகோரிக்கை வைத்துள்ளார்.

குழித்துறை நகர்மன்ற உறுப்பினர்- இரத்தின மணி

தமிழகத்தில் ஒருபுறம் காவல்துறையில் ஆடர்லீ முறை ஒழிக்கபட்டு வரும் நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகத்துறையில் ஆடர்லீ  முறை தலைதூக்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *