முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. அதன் பின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.