• Fri. Apr 19th, 2024

குளறுபடிகளை விவாதிக்க தயார்! அமைச்சர் சுப்பிரமணியன்…

அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவ துறையில் நடந்த குளறுபடிகளை சரி செய்து வருகிறோம். இதுகுறித்து, நேரடியாக விவாதிக்கவும் தயார்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள இரண்டு, 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பிரன்ஸ்’ வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அளித்த பேட்டியில்
தமிழகத்தில், பிரதமர் கேர் நிதியின் வாயிலாக 70 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் புதிதாக துவக்கப்படும், 11 மருத்துவக் கல்லுாரிகளிலும் தலா, 150 மருத்துவ இடங்களை பெற, மருத்துவ கல்வி இயக்குனர் டில்லியில் முகாமிட்டுள்ளார்.கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில், எக்ஸ்ரே பரிசோதனை முடிவு பேப்பரில் வழங்கப்பட்டது என்பது தவறான தகவல்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில், பிலிம் ரோல்களில் எக்ஸ்ரே பரிசோதனை கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, டிஜிட்டல் முறையில், ‘வாட்ஸ் ஆப்’ போன்றவற்றில் தான் தரப்படுகிறது. விபத்து போன்ற நீதிமன்றம் செல்ல வேண்டிய நேரங்களில் மட்டுமே பிலிம் ரோல்களில் வழங்கப்படும்.

இது தெரியாமல், எதிர்க்கட்சி துணை தலைவர் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முந்தைய ஆட்சியை விட 487 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப் பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., ஆட்சி யில், மினி கிளினிக்கில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு சம்பளம் வழங்க 144 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், நர்ஸ்கள் நியமிக்க பட வில்லை. இல்லாத நர்ஸ்களுக்கு நிதி ஒதுக்கியது அ.தி.மு.க., அரசு தான். மத்திய அரசிடம் இருந்து 800 கோடி ரூபாய் கொரோனா நிதி பெறப்பட்டுள்ளது. இந்த நிதி மறுமதிப்பீடு செய்யப்பட்ட பின், 4,900 நர்ஸ்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு இந்த நிதியின் கீழ் சம்பளம் வழங்கப்படும்.மருத்துவ துறையில், அ.தி.மு.க., ஆட்சியில் செய்த குளறுபடிகளை சரி செய்து வருகிறோம்.

குறிப்பாக, முழு உடற்கவசம், டாக்டர்கள் தங்கும் விடுதி, உணவு உள்ளிட்டவற்றின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பலவற்றை, நேரடியாக விவாதிக்கவும் தயார்.சமூக வலை தளங்களில் வரும் தவறான தகவலை வைத்து குற்றம்சாட்டுவது நல்ல அரசியலுக்கு அழகல்ல என்று எதிர்க்கட்சி துணை தலைவருக்கு தெரிவிக்கிறேன் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *