• Fri. Apr 26th, 2024

தடுப்பூசி போடுங்க பரிசை அல்லுங்க!!மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!…

கரூர் மாவட்டத்தில் அடுத்தக்கட்டமாக வரும் 10ஆம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத இலக்கை எய்திடும் வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். அதற்காக வாக்குச்சாவடி அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவர்களின் பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் எண் போன்ற விபரங்களை குறித்து வீடு வீடாக சென்று கணக்கெடுத்து சேகரிக்க வேண்டும்.

கணக்கெடுப்பாளர் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபர்களை அழைத்து வருகின்றார்களோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், அன்றைய முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மிஷின், 2ஆம் பரிசாக கிரைண்டர், 3ஆம் பரிசாக மிக்ஸியும், 4ஆம் பரிசாக 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு பாத்திரங்களும் வழங்கப்படும் என்றார்.

அதன்படி, 25க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கணக்கெடுப்பின்போதே பரிசுகள் குறித்த விபரம் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *