மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடையை மாற்றக் கோரி, சாதுக்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் ராமாயண் விரைவு ரயில் என்ற சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி டில்லியில் புறப்பட்ட இந்த ரயில் அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்குச் செல்கிறது. இந்த ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ரயில் பணியாளர்கள் சாதுக்கள் அணிவது போல தலைப்பாகை, கழுத்தில் உத்திராட்ச மாலை அணிவது சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலர் அவதேஷ்புரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ரயில் பணியாளர்கள் சாதுக்கள் அணிவது போல தலைப்பாகை, கழுத்தில் உத்திராட்ச மாலை ஆகியவற்றுடன் பயணியருக்கு உணவு பரிமாறுகின்றனர். இது, ஹிந்து மதத்தையும், சாதுக்களையும் இழிவுபடுத்தும் செயல்.
உடனடியாக ரயில் பணியாளர்களின் காவி சீருடையை மாற்றக் கோரி, ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். காவி சீருடையை மாற்றாவிட்டால், எங்கள் அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள், டில்லியில் டிச., 12ல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர் என அவர் கூறினார்.