• Thu. Apr 25th, 2024

சிவப்பு ரோஷன் கார்டுகளுக்கு ரூ.5000…முதல்வர் அறிவிப்பு

Byகாயத்ரி

Nov 23, 2021

பருவமழை தொடங்கியதையடுத்து புதுச்சேரியின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது.

இதையடுத்து புதுச்சேரியில், சிவப்பு நிற ரேஷன்கார்டுகளுக்கு வெள்ள நிவாரண தொகையாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மஞ்சள் கார்டுகளுக்கும் நிவாரணம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரியில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, 130 செமீக்கு பதிலாக 180 செமீ மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகூர் உட்பட பல பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக 7000 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகள், கால்நடைகளை இழந்துள்ளனர். மழை சேதம் அதிக அளவில் உள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி கேட்டுள்ளோம். மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்தியக்குழு ஆய்வுக்கு பின் மேலும் நிவாரணம் கேட்போம்.மழைக்கால நிவாரணமாக சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு வழங்கியது போல் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5000 வழங்க கோரிக்கைகள் வந்தன. அதனால், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும். தீபாவளிக்கு அறிவித்த பத்து கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *