

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாம் வேட்புமனுவை திரும்பபெற வலியுறுத்துமாறு மூத்த தலைவர்கள் சிலர் விடுத்த வலியுறுத்தலை ராகுல்காந்தி நிராகரித்துவிட்டதாக சசிதரூர் கூறியுள்ளார்.
சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
தற்போதைய நிலவரப்படி மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை திரும்பப் பெறச்செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனால் அதனை நிராகரித்த ராகுல்காந்தி, தலைவர் தேர்தலில் போட்டியிருப்பதுதான் காங்கிரசுக்கு நல்லது என தெரிவித்ததாக சசிதரூர் தெரிவித்துள்ளார்.
