மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவார்கள். அந்த வகையில், இதுவரை 10கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தை அமாவாசையான இன்று, பிரயாக்ராஜில் அமிர்த ஸ்நானம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்த தற்போதைய நிலைமையைக் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மகா கும்பமேளா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களுக்குப் பதிலாக விஐபி களுக்கு சிறப்பு கவனம் செலுத்திய நிர்வாக சீர்கேடுதான் இந்த துயரச் சம்பவத்திற்குக் காரணமாகும்.
மகா கும்பமேளாவுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இன்று போன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க மேம்பட்ட முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.