



நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இலக்கிய புகழும், பெருமைகளும் நிறைந்த மாவட்டம் விழுப்புரம். திராவிட இயக்கத்தின் தலைமகனாக திகழ்ந்தவர் மறைந்த கோவிந்தசாமி. அவரது நினைவிடத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த பெருமை

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கிடு வழங்கியவர் கருணாநிதி. இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது 2 லட்சம் பேர் மீதான வழக்கை திரும்பப்பெற்றது திமுக அரசு. 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். சமூக நீதியை நிலைநாட்டவே திமுக அரசு தோன்றியது.
விழுப்புரம் மாவட்டத்தில் கேலியனூர் சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம்
நிறைவேற்றப்படும். செஞ்சி, மரக்காணத்தில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். தளவானூர் அணைக்கட்டு ரூ.84 கோடியில் சீரமைக்கப்படும். திருவாமத்தூர் கோவிலில் திருமண மண்டபம் கட்டப்படும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். நிதி இல்லை என புலம்பாமல் மக்களின் குறைகளை நீக்கும் அரசாக செயல்பட்டு
வருகிறோம். சில எதிர்க்கட்சித்தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது ஆட்சியின் மீதான குறை அல்ல. அவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறை. பிறர் நல்லது செய்தால் எதிர்கட்சித் தலைவருக்குப் பிடிக்காது.
நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு. என்னை முன்னிலைப்படுத்த நான் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தை முன்னிலைப்படுத்தவே உழைக்கிறேன். இது ஸ்டாலின் ஆட்சி எனச்சொல்லி பெருமை தேடிக்கொள்ள விரும்பவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்பதையே நான் கூறுகிறேன். திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்திகள் இங்கு தலைதூக்க முடிவதில்லை ” என்றார்.

