திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 1-ந்தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் தர வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “2026 தேர்தலிலும் திமுகவுக்கே மக்கள் ஆதரவு அளிப்பார்கள். எதிர்க்கட்சிகளின் பொய்குற்றச்சாட்டுகளை நம்ப மாட்டார்கள். திமுக அரசின் சாதனைகளைப் பொறுக்கமுடியாமல், விமர்சிப்பவர்களை மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என கூறினார்.
திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட நடத்தை விதிகள் உருவாக்கிட வேண்டும் என்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.