புளியங்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மண்டகப்படிதாரர்கள் நடத்தும் தைப்பூச பிரமோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது!
புளியங்குடி, பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றது. உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழாவினை நடத்துவார்கள்.
இந்த வருடம் ஜனவரி 09 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 18ம் தேதி தைபூசம், தேரோட்டம், 20ம் தேதி தெப்ப திருவிழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தளங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது!
எனவே, விழாக்களை நடத்துவது தொடர்பாக அனைத்து சமுதாய தலைவர்களுடான ஆலோசனை கூட்டம் இன்று புளியங்குடி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எஸ்ஐ பரத்லிங்கம், கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்..
தென்காசி ஆர்டிஒ ராமச்சந்திரன்,உதவி ஆணையர் கோமதி ஆகியோருடன் கலந்து ஆலோசித்தபின் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் தைப்பூச பிரமோற்சவ விழாவை கோவிலுக்குள்ளேயே நடத்துவது என்றும் தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழாக்களை ரத்து செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டது.