• Sat. Apr 20th, 2024

கிராமப் பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்கும் திட்டம் – கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட ஊராட்சித் தலைவர்களின் நல அமைப்பு சார்பாக கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கும் அரசின் திட்டத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெண்கள் கொட்டும் மழையிலும் நனைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கூட கிராம ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இனைக்க வேண்டாம் என மக்கள் சார்பில் கருத்து பதிவு செய்யப்படும் கூட அரசு பின்வாங்காமல் அதனை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருப்பதாக கூறி கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கிராம ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியோடு இணைத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் திட்டப்பணிகள் ரத்தாகும். அதை நம்பி இருக்கின்ற ஏராளமான பெண் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வீடுகளுக்கு கட்டிட வரைபடம் அனுமதி கிடைக்க பலவித மாநகராட்சி விதிமுறைகள் இடம் வாங்க விற்க சந்தை மதிப்பு நகரப் பகுதிகளை போல உயரம் இது ஏழை கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி கட்டணம் ஆகியவை பல மடங்கு உயரும். குடிசை வீடு மற்றும் வீடு பழுது பார்ப்பதற்காக அரசு வழங்கி வந்த நிதி உதவிகள் ரத்தாகும். சொந்த இடம் இல்லாமல் கிராமங்களில் வசித்து வரும் கூலித்தொழிலாளர்கள் அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச வீட்டுமனை ரத்தாகும், ஆக மொத்தத்தில் கிராம மக்களுடைய வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதன் புள்ளிவிபரம் என்று எடுத்தால் கிராமபுற மக்களின் சுமார் 20% வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஊராட்சித் தலைவர்களின் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக திமுக அரசு செயல்படுவதாக ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பு குற்றம்சாட்டி உள்ளனர். இந்தப் போராட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *