இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதுள்ளது. ஆந்திரா, டெல்லி முதல்வர்கள் இதைக் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதால் மின்வெட்டு பிரச்சனை எழும் சூழல் உருவாகலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழகத்தில் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட். கோடைகாலத்தில் இது சுமார் 17,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின் உற்பத்தி நிகழ்கிறது. அனல்மின் நிலையங்கள் தடையினறி இயங்க 14 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அனல்மின் நிலையங்களில் வெறும் 4 நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு சூழல் உருவாகலாம் எனும் அச்சம் சூழ்ந்துள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டால் விவசாயமும், தொழில்துறையும், மருத்துவ சேவைகளும் கடுமையான பாதிக்கப்பட்டது. மீண்டும் அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகிட அனுமதிக்கக்கூடாது. பொருளாதார மந்தநிலையாலும், கொரோனா பெருந்தொற்றினாலும், பெட்ரோல் – டீசல் விலை உயர்வினாலும் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சேவைகளுக்கும் தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம். இந்தச் சூழ்நிலையில், மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் ஏற்பட்டம் தமிழகம் நிச்சயம் தாங்காது.
தமிழக அரசு தேவையான நிலக்கரியை மத்திய அரசின் கேட்டுப்பெற விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசும் அனல்மின் நிலையங்களுக்கு தங்கு தடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது’’ என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.