• Wed. Feb 19th, 2025

தனியார் பால் விலை அதிரடி உயர்வு

Byவிஷா

Feb 4, 2025


தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனம் பால் விலையை திடீரென உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆவின் என்ற பெயரில் பால் பொருட்கள் விற்பனையை செய்து வருகிறது. இதேபோல தமிழகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே விலை நிர்ணயம் செய்து வருகின்றன. கொள்முதல் விலை, செலவு போன்றவற்றை காரணம் காட்டி தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி விடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரோக்கியா நிறுவனம் பால், தயிர் விற்பனை விலையை கடந்த நவம்பர் 8 ஆம் முதல் உயர்த்தியது. பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப் பொருள்கள் விலையேற்றம் போன்ற காரணங்களை காட்டி ஆரோக்கியா நிறுவனம், பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூபாய் 2 உயர்த்தியது. இந்நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளன. புதிய விற்பனை விலையை மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்கள் கடந்த டிசம்பர் முதல் அமுலுக்கு கொண்டு வந்துள்ளன. சீனிவாசா பால் நிறுவனம் நாளை முதல் பால் விற்பனை விலை உயர்வை அமலுக்கு கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தனியார் பால் நிறுவனங்களின் சமன்படுத்தப்பட்ட பால் 500 மிலி பால் பாக்கெட் 26 ரூபாயில் இருந்து 27 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500மிலி பால் பாக்கெட் 30 ரூபாயில் இருந்து 31 ரூபாயாகவும், 1 லிட்டர் பால் பாக்கெட் 60 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், நிறைகொழுப்பு 500 மிலி பால் பாக்கெட் 35 ரூபாயில் இருந்து 36 ரூபாயாகவும், 1 லிட்டர் பால் பாக்கெட் 68 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனம் கடந்த வாரம் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்திருக்கும் தருணத்தில் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சக்ரா, அர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஜனவரி மாதம் ஒவ்வொன்றாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தின. இதேபோல், ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதலும், பிப்ரவரி 3ம் தேதி முதல் ஜெர்சி பால் நிறுவனமும் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5.00ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் பிரபல பால் நிறுவனமான ஆரோக்கியா நிறுவனமும் திடீரென பால் விலையை உயர்த்தி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு. ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பால் ஒரு லிட்டர் 69 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று முதல் 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல அரை லிட்டர் பாக்கெட் விலை 37 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமலா, ஜெர்சி, சீனிவாசா, சக்ரா, அர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி வரும் நிலையில் ஆரோக்கியா நிறுவனமும் பால் விற்பனை விலையை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.