இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என்று டெல்லி வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்து என்று அவர் பதிவிட்டுள்ளார்.