• Thu. Apr 18th, 2024

மழை வெள்ளத்திலும் உயிர்களை துணிச்சலுடன் மீட்கும் காவல் துறையினர்

Byமதி

Nov 9, 2021

சென்னையில் வயது முதிர்ச்சியால் நடக்க முடியாத தம்பதியை நாற்காலியில் வைத்து தூக்கி சென்று மாம்பலம் காவல் துறையினர் மீட்டனர்.

சென்னை தி.நகர் ராமன் தெருவில் வசித்து வருபவர்கள் மூர்த்தி (81) ஷியாமளா (70) ஆகியோர் வசிக்கும் வீட்டை மழைநீர் சூழ்ந்து கொண்டதால் வெளியே வரமுடியாமல் தவித்து வந்தனர். இதனால் உறவினர் வீட்டிற்கு தங்களை அழைத்துச் சென்று விடும்படி காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு காவல் குழுவினர் அவர்களது வீட்டிற்கு விரைந்து சென்று, முதியவர்கள் இருவரையும் நாற்காலியில் அமர வைத்து அவர்களது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்தனர்.

இதேபோல், மழைத் தண்ணீர் சூழ்ந்ததால் மிகுந்த அவதியுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக தூக்கிச்சென்று மருத்துவமனைக்கு வேப்பேரி போலீசார் அனுப்பி வைத்தனர்.

சென்னை சூளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹீராலால் என்பவரது 2 வயது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மழை தண்ணீர் தேங்கி உள்ளதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பாக வேப்பேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பேரிடர் மீட்பு காவல் குழுவினர் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று குழந்தையும் அவரது தந்தையையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல், சூளை, அஷ்டபுஜம் சாலையில் வசிக்கும் 80 வயதான முதியவர் மணி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். தேங்கியிருந்த மழைத்தண்ணீரால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது தொடர்பான தகவலறிந்து விரைந்து சென்றனர். ஆனால் அங்கு 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், முதியவர் மணியை போலீசார் கட்டிலோடு தூக்கி சென்றனர். பிறகு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *