தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45சதவீதம், மாணவிகள் 96.38சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் தமிழகத்தில் இந்த அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 19-ந் தேதி துணைத்தேர்வு தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணபித்து பங்கேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934 பேரும் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.