



அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் கடந்த திங்களன்று விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 67 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பில்டெல்பியாவில் நேற்று நள்ளிரவு சிறிய ரக பயணிகள் விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.இந்த விமானத்தில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் பெரும் தீப்பிழம்புடன் வாகனங்கள் மற்றும் வீடுகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமான விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் அவசர சேவைக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டது. சுமார் 12 க்கும் மேற்பட தீ அணைப்பு வாகனங்கள் விபத்துக்குள்ளான இடத்தில் முகாமிட்டுள்ளன. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு அருகில் பிலேடெல்பியாவில் விமான நிலையம் அமைந்துள்ளது.
இந்த விமான விபத்து குறித்து பென்சில்வேனியா மாகாண எமெர்ஜென்சி சேவை குழு தனது எக்ஸ் பக்கத்தில், “பில்டெல்பியாவின் வடகிழக்கு அருகே உள்ள கோட்மன் மற்றும் பஸ்டெல்டன் அவென்யூ மற்றும் ரூஸ்வெல்ட் மால் அருகே விமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

