• Sat. Feb 15th, 2025

லாஸ் ஏஞ்சலில் விழா கோலாகலம்… சென்னையில் பிறந்த பாடகிக்கு கிராமி விருது

ByIyamadurai

Feb 3, 2025

சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டன்டன் தனது ஆல்பத்திற்காக இந்த ஆண்டுக்கான கிராமி விருதை வென்றுள்ளார்.

இசையில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, கிராமி விருது அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 67வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலில் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 94 பிரிவுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக ‘ நாட் லைக் அஸ்’ பாடல் 5 விருதுகளை வென்றது. சிறந்த ராப், சிறந்த ராப் பெர்ஃபாமன்ஸ், சிறந்த மியூசிக் வீடியோ, சிறந்த ரெக்கார்டிங் , இந்த ஆண்டின் சிறந்த பாடல் என 5 கிராமி விருதுகளைக் குவித்தது. அதேபோல், சப்ரினாவுக்கு இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகரான சந்திரிகா டன்டன், தனது ’த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக ’சிறந்த தற்கால ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார். புல்லாங்குழல் இசைக்கலைஞரான வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து இந்த விருதை வென்றார்.

சென்னையில் பிறந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டன்டன், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் (MCC) பட்டப்படிப்பை முடித்தவர். இவர் உலக அளவில் மிகப்பெரும் சந்தையை கொண்டுள்ள பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார்.

கல்லூரி படிப்பிற்கு பின்னர் திருமணம் முடிந்து கணவர் ராஜன் டன்டனுடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அவர் அங்கு தொழில்துறைகளில் ஈடுபட்டு ஒருமுக்கியப் புள்ளியாக உருவானார். தனது தொழில்களுக்கு நடுவே இசை மற்றும் பாடல்கள் அமைப்பதிலும் தீவிரம் காட்டி வந்த கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி த்ரிவேணி ஆல்பத்தை வெளியிட்டார். அதற்காக தான் தற்போது கிராமி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.