அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளருக்கு தான் முழு அதிகாரமும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியை இணைந்து வழிநடத்தி செல்லும் வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த இரட்டை தலைமையால் கட்சியினரின் அதிகாரம் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை தலைமைக்காக விதிகளை நீக்கிவிட்டு 2017-ம் ஆண்டுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற பழைய விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமையை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை தலைமையில் பொதுச்செயலாளருக்கே அனைத்து அதிகாரமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டம்
