ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா பணிக்கம்பாளையம் பகுதியை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது.பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த தினக்கூலி தொழிலாளர்கள். எங்களுக்கென்று சொந்த வீடு இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டாவோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள எட்டு நபர்களுக்கு மட்டுமே அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த எட்டு நபர்களுக்கும் சொந்த வீடு உள்ளது. அந்த வீடுகளை அவர்கள் வாடகைக்கு விட்டுள்ளனர். அவர்களது குடும்ப நபர்கள் அரசு பணியில் உள்ளனர். இந்த நபர்களுக்கு பெருந்துறை வட்டம் திருவாச்சி கிராமம் அருகில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் ஒதுக்கீடு செய்துள்ளனர். வீடு உள்ள நபர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள வீடுகளை ரத்து செய்துவிட்டு வீடு இல்லாத எங்களைப் போன்ற ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து தருமாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.