


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், செந்நாய்கள், கழுதைப்புலிகள், காட்டெருமைகள், சுருளைக் கொம்பு மான்கள், புள்ளிமான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக காணப்படுகின்றன.
இந்த வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள தீவனங்களை தின்றுவிட்டு அங்குள்ள குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரைக் குடித்து வந்தன.

பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் சார்பில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே செயற்கையாக குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது லாரி மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குட்டைகளில் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் உள்ள விலங்குகள் இந்த குட்டைகளுக்கு வந்து தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்வதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

