• Fri. Apr 19th, 2024

ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மக்கள் அவதி..!

Byவிஷா

Jul 21, 2022

ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், பிபிஎல் எனப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள எண்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அறிவித்த சிறப்பு குறை தீர்க்கும் மனு நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்றது. இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை பெற பலர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த பகுதியில் நடக்கும் சிறப்பு குறைதீர்ப்பு மனு நாள் முகாமில் வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் பவானி ரோட்டில் உள்ள அக்ரஹாரம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் விஏஓ அலுவலகத்தில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் மனு நாள் முகாம் நடைபெற்றது. அதில் 50க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என உதவித்தொகை பெறுவதற்கு மருத்துவர்களின் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கினர்.
ஆனால் அந்த விண்ணப்பத்தில் பிபிஎல் எனப்படும் ஒவ்வொருவருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எண்கள் இல்லாததால் முகாமில் பெயரளவிற்கு மட்டும் அதிகாரிகள் விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டனர்.
பிபிஎல் நம்பர் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்து முதியோர் உதவித்தொகை பெற முடியும். இப்படி நடைமுறையில் இருக்க முகாமிற்கு வந்த அனைத்து விண்ணப்பங்களும் பிபிஎல் எண் இல்லாததால் அதிகாரிகள் விண்ணப்பங்களை பெயரளவிற்கு மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு முதியவர்களை அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த முதியோர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உதவித்தொகை பெற வந்த முதியவர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் வகையில் பிபிஎல் நம்பரை இணைத்து உதவித்தொகை பெற்றுத் தருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *