

சென்னை பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்- ஆவடி உள்பட 4 புதிய மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 650 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் இந்த ரயில்களில் 10 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் இந்த வழித்தடங்களில் பயணிகள் தேவை அடிப்படையில், அவ்வப்போது புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அதன் அடிப்படையில் 4 புதிய மின்சார ரயில் சேவைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு முற்பகல் 11.15 மணிக்கு ஒரு மின்சார ரயில் (43013), ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 5.25 மணிக்கு ஒரு மின்சார ரயில் (43006), சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.35 மணிக்கு ஒரு மின்சார ரயில் (42035), கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் இடையே காலை 9.10 மணிக்கு ஒரு ரயில் (42014) ஆகிய 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் சேவைகள் இன்று (மார்ச் 3) முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

