மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கலாக உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (பிப்ரவரி 1) 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, இன்று (ஜனவரி 31) முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டனர்.அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜு, காங்கிரஸ் எம்.பி.க்கள் கௌரவ் கோகோய், சுரேஷ், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய், டெரெக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தொடரில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.