• Sat. Feb 15th, 2025

இந்தியாவில் முதல் முறையாக பொது சிவில் சட்டம் – உத்தாரகண்டில் இன்று அமலுக்கு வருகிறது

ByIyamadurai

Jan 27, 2025

இந்தியாவில் முதல் முறையாக உத்தாரகண்ட் மாநிலத்தில் முதல் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

உத்தாரகண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி உத்தாரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நாட்டிலேயே முதல் மாநிலமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது. அதற்கான பணிகள் தற்போது அனைத்தும் முடிவுற்ற நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பொது சிவில் சட்டத்துக்கான விதிமுறைகள், அதை அமல்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் உள்பட சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன. பொது சிவில் சட்டம் சமூகத்தில் சீரான தன்மையை கொண்டு வரும். அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள், பொறுப்புகளை உறுதி செய்யும்.

நாட்டை வளர்ச்சியடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, இணக்கமான, தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்ற பிரதமர் மோடி நடத்தும் யாகத்தில் மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவது ஒரு பிரசாதம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உத்தரகாண்ட் தலைமை செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டத்துக்கான இணையதளம் ஒன்றை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜனவரி 28) உத்தாரகண்ட் வர உள்ளார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.