

சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு வந்த ஆம்னி பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து பேருந்து தீ விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு 23 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அய்வர்ராஜா மகேஷ் ஆகியோர் ஓட்டுனராக அதே மாவட்ட சேரன்மாதேவி சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்துனராகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பேருந்து பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் நள்ளிரவில் 12:30 மணி அளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பேருந்தின் பின்புறம் இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் பேருந்து தாறுமாறாக ஓடினாலும் டிரைவர் சாமர்த்தியமாக சாலையோரம் நிறுத்தினார். இதனிடையே பேருந்தில் தீப்பிடிக்க தொடங்கியது பயணிகள் அலறி அடித்து எழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் கைகள் கிடைத்த உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று முந்தியடித்து கீழே இறங்கினர்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பயணிகளை பேருந்து பக்கம் நெருங்க விடாமல் பாதுகாத்து பெரம்பலூர் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்கு தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. ஆம்னி பேருந்து நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


