• Mon. Apr 21st, 2025

வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

ByT.Vasanthkumar

Feb 20, 2025

பெரம்பலூர் மாவட்டம் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட மண்டல அலுவலரக்ள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (20.02.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், முதன்மை செயலாளர் / போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 மூலம் இதுவரை எத்தனை புதிய வழித்தடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளது என்பது குறித்தும், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் எவையெல்லாம் மாவட்ட அரசிதழில் வெளிவந்துள்ளது என்பது குறித்தும் ஒவ்வொரு மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்கள் வாரியாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிற்றுந்து இயக்குவது தொடர்பாக எத்தனை விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது என கேட்டறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிற்றுந்து திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடமும் கருத்துக்களை கேட்டு சிற்றுந்து இயக்கம் தேவைப்படும் வழித்தடங்கள் குறித்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, புதிய மினி பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அதற்காக ஒப்பந்தம் வெளியிடப்பட்டு புதிய மனுக்களும் பெறப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் மினி பேருந்து இயக்கம் தொடர்பாக எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது, அதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை குறித்த இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்திலேயே மினி பேருந்து இயக்கம் என்ற சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மேலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் மினி பேருந்து சேவையை நீட்டித்து, அதன் மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து வசதி பெறுவதுடன், மற்ற இடங்களுக்கும் போக்குவரத்து இணைப்பு கிடைக்கும் என்பதற்காக மினி பேருந்து சேவை திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே-2025 மாதத்திற்கு முன்பாக இத்திட்டத்தினை முழுவதுமாக முடித்து செயல்படுத்துவது தான் போக்குவரத்து துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதற்காக இந்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 62 வழித்தடங்களுக்கான மினி பேருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மினி பேருந்து இயங்காத வழித்தடங்களின் உரிமையாளர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு விரும்பினால் அந்த வழித்தடத்தில் தொடரவும், முடியாத பட்சத்தில் வழித்தடத்தினை ரத்து செய்து புதிதாக வழித்தடம் துவங்கப்பட்டு மினி பேருந்து சேவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சேவைகளை சிறப்புடன் செம்மைபடுத்துவதற்காக புதிய மினி பேருந்து வழித்தடங்களை அப்பகுதிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அழகரசு, துணை போக்குவரத்து ஆணையர்கள் செல்வகுமார், ஜெயக்குமார், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு மண்டலங்களுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.