புதுச்சேரி என்பது ஆன்மீக பூமியாகத் திகழ்கிறது. இங்கு அரவிந்தர், ஸ்ரீமத் குரு சித்தானந்தர், வண்ணாரப் பரதேசி, சக்திவேல் பரமானந்தா, உள்ளிட்ட பல்வேறு சித்தர்களுக்கு இங்கே ஜீவ சமாதிகளும் உண்டு. புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள் புதுச்சேரி வாழ் வெளி மாநிலத்தவர்கள் இந்த ஜீவசமாதிகளை பார்த்து வணங்கிச் செல்வது வழக்கம். இதுபோன்று சித்தர்கள் பூமியாக புதுச்சேரி கருதப்பட்டாலும், சிவபெருமான் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி புதுச்சேரியில் இருப்பது என்பது மேலும் புதுச்சேரிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் கூற சிவபெருமானே திருவாசகத்தை எழுதி அடியில் அவரின் கையெழுத்திட்ட ஓலைச்சுவடி தான் புதுச்சேரியில் உள்ளது என்பது என்றால் அது வியப்பான ஒன்றாகும்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமான எழுதி அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறப்படும் ஓலைச்சுவடி ஒன்று உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடவுள் உண்டா இல்லையா என நினைப்பவர்கள் சிலர் இருக்கும் போது கடவுளே தன் கைப்பட பக்கம் பக்கமாக எழுதிய பின் கையெழுத்து சான்றும் இட்ட ஒரு பனை ஓலைச்சுவடிக் கட்டு இன்னும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள அம்பலத்தடையார் மடத்தில் தான் இந்த ஓலைச்சுவடி பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 3,500 ஆண்டுகளுக்கு எழுதப்பட்ட திருவாசக ஓலைச்சுவடி, ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே அவை இருக்கும் வெள்ளி பெட்டியை திறந்து பூஜை செய்யப்படுகிறது.
இந்த செய்தி சற்று வியப்பாக இருந்தாலும் பல ஆண்டுகளாக புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது நிதர்சனமான உண்மை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் மகா சிவராத்திரி அன்று ஓலைச்சுவடியை பார்த்து வணங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவற்றை வணங்கி செல்வது இன்றளவும் வழக்கமாக உள்ளது. மேலும் இந்த ஓலைச்சுவடியை பக்தர்கள் தொட்டுப் பார்க்கவோ அல்லது அதன் அருகில் சென்று வழிபடவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை பக்தர்களுக்கு எட்டாத தூரத்தில் மட்டுமே ஓலைச்சுவடி வைக்கப்பட்டு இருக்கும் இது ஒரு புறம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சிவபெருமான் கையெழுத்திட்ட ஓலைச்சுவடியை கண்டால் சிவனையே நேரில் பார்த்த மாதிரி என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தரிசனம் செய்து வருகின்றனர்.