• Sat. Apr 20th, 2024

இனி 2 இல்லை ….3 – சீனா அதிரடி!…

By

Aug 21, 2021

சீனாவில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என நாடாளுமன்றத்தில் சலுகைகளுடன் சட்டம் நிறைவேறியது.


உலக அளவில் மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதியர், ஒரு குழந்தை என்ற கொள்கை அங்கு அமல்படுத்தப்பட்டது. பல்லாண்டு காலம் இருந்து வந்த இந்த கொள்கையால் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தது.

இந்தநிலையில் 2016-ம் ஆண்டு, தம்பதியர் 2 குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கொள்கை மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் அங்கு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பெரிய அளவில் மாறவில்லை. பிறப்புகள் அதிகரிக்கவில்லை.

விலைவாசி உயர்வும், குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்கு ஆகிற செலவுகளால் பல தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வதையே தள்ளிப்போடுகிற அவலமும் இப்போதும் அங்கு நேருகிறது.

சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, பிறப்பு விகிதம் மிகவும் சரிந்துள்ளதை சுட்டிக்காட்டியது. இந்தநிலையில் சீனாவில் தம்பதியர் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று ஜின்பிங் அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இது மிகப்பெரிய கொள்கை மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சீனாவின் நாடாளுமன்றத்தில் நேற்று சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதையும், குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்கான சுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பல தீர்மானங்களுடன் இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரம்புக்கு அப்பாற்பட்டு குழந்தைகளை எந்தவொரு தம்பதியர் சீனாவில் பெற்றுக்கொண்டாலும், அதற்காக அவர்களுக்கு சமூக பராமரிப்பு கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. இது இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தம்பதியருக்கு விடுமுறை அளிப்பதற்கு உள்ளூர் அரசு அமைப்புகள் இனி ஊக்குவிக்கப்படும். பெண்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் அதிகரிக்கப்படும். குழந்தைகள் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு வகை செய்து ஜின்பிங் அரசு அளித்துள்ள சலுகைகளால் அங்கு பிறப்பு விகிதம் இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *