எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தாம்பரத்தில் திமுக சார்பில் இன்று பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினர், பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு திமுக தாம்பரம் மாநகர செயலாளரும், முன்னாள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். ராஜா தலைமை தாங்கினார். இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், நான்காவது மண்டலக் குழுத் தலைவர் காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, வார்டு-1 மாமன்ற உறுப்பினர் லோகநாதன் சிட்லபாக்கம் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
சாலை மறியல் காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து, தாம்பரம் காவல் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக தாம்பரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.




