• Fri. Apr 26th, 2024

தமிழகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி புத்தகமில்லா தினம்…

Byகாயத்ரி

Feb 11, 2022

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் மட்டுமே பயின்று வந்த மாணவ- மாணவிகளை மீண்டும் உற்சாகமாக கல்வி பயில பள்ளி கல்வி துறை முயற்சி மேற் கொண்டு வருகிறது.

முதல்கட்டமாக 6,7,8 -ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரின் கற்றல் திறனை வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதற்காக பள்ளி கல்வி துறை சார்பில் வருகிற 26-ம் தேதி புத்தகமில்லா தினம் (NO BAG DAY) கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அன்று மாநிலம் முழுவதும் 6,7,8-ம் வகுப்பு படிக்கும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் அனைவரும் வகுப்புகளுக்கு புத்தகமில்லாமல் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

புத்தகமில்லா தினத்தன்று மாணவ-மாணவிகளின் தனித்திறமைகளை கண்டறியும் போட்டிகள் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும், பாரம்பரிய கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் விளையாட்டுகளை நடத்தவும் கல்வி துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உள்ளனர்.இது தவிர சாதனை படைத்த பெண்கள், சிறுவர், சிறுமிகள் குறித்த தகவல்களை திரட்டி அதனை மாணவ, மாணவிகளுக்கு குறும்படமாக காட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ஒரு கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இடை நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் திறமையை வளர்க்க முடியும் என்றும் பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.போட்டிகளையும், புத்தகமில்லா தினத்தையும் கொண்டாட ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *