

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்றும், ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல கூடாது எனவும் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெறும் என கூறி வழக்கை வருகிற 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் ஹிஜாப் இடைக்கால தடைக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் எனவும் வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.