• Fri. Mar 29th, 2024

மேகதாது அணைக்கு மத்திய அரசின் சமரசம் தேவையில்லை – பி.ஆர்.பாண்டியன்

Byadmin

Feb 11, 2022

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காவிரி பிரச்சினை காரணமாக தீவிர போராட்டத்தின் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018ல் மத்திய அரசு சட்டவிரோதமாக மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி கொடுத்ததை பயன்படுத்தி கர்நாடகா வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்து, உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் வழங்கியுள்ளது. அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிவைத்து ஒத்த கருத்தை உருவாக்குவதாக கூறி மத்திய அரசு தொடர்ந்து ஆணையத்தை நிர்பந்தித்து வருகிறது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கர்நாடக பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் தமிழகம் கர்நாடகம் இடையே ஒரே கருத்து உருவாகும் பட்சத்தில் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அரசு ஒரு பார்வையாளராக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் குறித்தான நான்கு மாநிலங்களின் நிர்வாக அதிகாரம் முழுமையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசினுடைய கருத்து ஆணையத்தை அச்சுறுத்தும் வகையிலும் தமிழகத்திற்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒருதலைப்பட்சமான சதி செயலாகும்.

மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும். ஆணையத்தில் சம்பந்தபட்ட மாநிலங்கள் மட்டும்தான் கருத்து பரிமாறிக் கொள்ள முடியும். மத்திய அரசு பார்வையாளராக மட்டுமே பங்கேற்க இயலும் இதனை உச்சநீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் தமிழகம் கர்நாடகம் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்கிற கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எதிர்காலத்தில் அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும். பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்கு தமிழக அரசு உடனடியாக உரிய எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து மேகதாது அணைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. அதனை துரிதப்படுத்த சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *