நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!..
வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.அத்துடன் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்றும், அந்தமான், மியான்மர் கடல் பகுதியை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டெல்டா மாவட்டங்களிவ் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது.மதியத்திற்கு மேல் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் மழை பெய்யாதபோதும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் இன்று 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் 27 மீனவ கிராமங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 6வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. புயல் சின்னம் காரணமாக நாகை துறைமுகத்தில் இன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மதியத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது.இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது.
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் துறைமுகத்தில், இன்று 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் நிறுத்தி வைக்கும்படி மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.