• Fri. Mar 29th, 2024

நீட் தேர்வு விவகாரம்: முதல்வர் பகிரங்க
மன்னிப்பு கேட்க எடப்பாடி வலியுறுத்தல்

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சொந்த நாட்டிலே! நம் நாட்டிலே! சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்! சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்! என்ற எம்.ஜி.ஆர். பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத திமுக ஆட்சியில், நாள்தோறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு விளையாடி வரும் இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை காலந்தான் தமிழக மக்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்; அந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று தற்போதைய முதல்வரும், அவருடைய அருந்தவப் புதல்வரும், சட்டமன்றத் தேர்தலின்போது மேடைதோறும் கொட்டி முழங்கினார்கள்.
கடந்த 20 மாதகால இந்த ஆட்சியில் நீட் தேர்வை ஒழிக்க எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல், அரைத்த மாவையே சட்ட முன்வடிவு என்ற பெயரால் அரைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசு, உச்ச நீதிமன்றத்தில் அம்மாவின் அரசால் தொடரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை (மறுசீராய்வு மனுவை) தாமதப்படுத்தாமல் விரைந்து நடத்தி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியிருக்க முடியும். ஆனால், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அம்மாவின் அரசால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த அரசு, கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த வழக்கை நடத்த எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், அந்த வழக்கானது தாமாகவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் வழக்கை நடத்தாமல் இந்த அரசு வாய்தா கோரியதால், உச்ச நீதிமன்றம் நீட் வழக்கை இந்த ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.3), நீட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த கையாலாகாத திமுக அரசு சார்பில், நீட் வழக்கை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு வாய்தா கோரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த அரசின் கோரிக்கையை நிராகரித்து கடும் கண்டனம் தெரிவித்து தலையில் குட்டியுள்ளது.
தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்க தங்களுடைய அரசு சட்டம் ஒன்றை இயற்றி இருப்பதாகவும், அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்த அரசு கோரியது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் எடுக்கும் நடவடிக்கை பற்றி நீதிமன்றத்திற்கு கவலை இல்லை. இந்த வழக்கை உடனடியாக முடிக்கும் வழிவகைகளைப் பாருங்கள் என்று கண்டிப்புடன் கூறி, நீட் வழக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *