• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிங்காபுரம் கிளை பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

போடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு போடி நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி முன்னிலை வகித்தார். இதில் மேற்கு ஒன்றிய பொருளாளர் மதிவாணன், மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர நிர்வாகி தாமோதரன், ராசிங்காபுரம் கிளை செயலாளர் முத்து மற்றும் கரியப்பகவுண்டம்பட்டி கிளை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது, காமராஜர் குழந்தைகளிடம் காட்டிய அன்பும் அரவணைப்பும் எவ்வாறு இருந்ததோ அதே பாணியில் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், பேனா மற்றும் பென்சில் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, கட்சி நிர்வாகி பிரசாத் மற்றும் மகளிர் அணி அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் கும்ப மரியாதை செய்தும், மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுடன், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் மகளிர் அணி அபிராமி பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் சிறப்பான ஆட்சியாக, அனைவரும் போற்றக்கூடிய ஆட்சியாக திகழ்ந்து வருகிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து நிர்வாகி பிரசாத் பேசுகையில், தமிழக மக்களுக்கு கிடைத்த முதலமைச்சர் மக்கள் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டவர் என்றும், அதேபோல்தான் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் மக்கள் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.

இதனை தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து போடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் பல்வேறு கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை பெற்று கொண்டதுடன், அம்மனுக்கள் மீது உரிய முறையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இவ்விழா அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.