• Sat. Apr 20th, 2024

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!

Byவிஷா

Mar 27, 2023

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான சாலகிராம மலையின் மேற்குப்பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக எதிரில், ஒரே கல்லினால் உருவான மலையைக் குடைந்து குடவறைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீநாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் கோயிலில் உள்ள ஸ்ரீநரசிம்மரையும், சாலகிராம மலையையும் வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் எடுத்து வந்த சாலகிராமம் மலையாக உருவாகி உள்ளதால், அந்த மலை வெட்டவெளியில் உள்ளது. இதுபோலவே ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு மேற்கூரை இல்லாமல் அமைந்துள்ளது சிறப்பாகும்.
முத்தங்கி சேவையில் நாமக்கல் அனுமனை தரிசனம் செய்தால் இழந்தது கிடைக்கும். நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவையில் தரிசித்தால், ராஜயோகம் கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மேலும் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்தருளுவார் அனுமன் என்று போற்றுகிறார்கள். ஆஞ்சநேயர் என்றதும் சட்டென்று நம் நினைவுக்கு வரும் திருத்தலம் நாமக்கல். பிரமாண்டமான உயரத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அனுமன். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வருடத்தில், கார்த்திகை மாதத்திலும், மார்கழி மாதத்திலும், தை மாதத்திலும் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடத்தப்படுகிறது. பிரமாண்ட அனுமனை, வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

மார்கழி மாதத்தில் வருகிற மூல நட்சத்திரம் அனுமன் ஜெயந்தி திருநாளாக அனைத்து வைஷ்ணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் திருத்தலத்தில் உள்ள அனுமனுக்கு, ஜெயந்தி திருநாளின் போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் வடைகளைக் கொண்டு, பிரமாண்டமான வடைமாலை சார்த்தப்படுகிறது. இந்தநாளில் அனுமனைத் தரிசிப்பதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் தலத்துக்கு வருகின்றனர்.
நாமக்கல் தலத்தின் நாயகனான அனுமனுக்கு பிரமாண்டமான துளசி மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. அதேபோல, வெற்றிலை மாலைகளும் அணிவிக்கப்படுகின்றன. அனுமனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இந்த துளசியையும் வெற்றிலையையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. வெற்றிலையும் துளசியும் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு அனுமனை தரிசித்துப் பிரார்த்தித்தால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும் என்கிறார்கள் அனுமன் பக்தர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *