• Tue. Apr 23rd, 2024

எங்க மகள் போன் நம்பரை தப்பா யூஸ் பண்ணலாமா – கதறும் பெற்றோர்

ஹிஜாப் போராட்டத்தை முன்னெடுத்த கர்நாடக மாணவிகளின் தனிப்பட்ட செல்போன் எண்களை பொதுவெளியில் சிலர் வெளியிட்டுள்ளதாகக் கூறி, அம்மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

உடுப்பி மாவட்ட காவல் கண்காளிப்பர் என்.விஷ்ணுவர்த்தனை சந்தித்த மாணவிகளின் பெற்றோர், ‘எங்கள் பிள்ளைகளின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இதனை சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளனர். இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய காவல் துறை, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ராம்’ என முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’ என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், மாணவிகளின் செல்போன் எண்கள் வெளியானது தொடர்பாக போலீஸில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *