• Thu. Apr 25th, 2024

உன்னால நான் கெட்டேன் ..என்னால நீ கெட்ட…எடப்பாடி vs ஸ்டாலின்

நீட் தேர்வு குறித்து அதிமுக தலைவர்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து இருந்த நிலையில் அந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
நீட் தேர்வு குறித்து பொதுவான இடத்தில் முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். நீதிபதியாக இருந்து மக்கள் தீர்மானிக்கட்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறைமுகத்தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிந்து விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் ஈரோடு மாநகராட்சி திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலியில் பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலை உருவாகும். நான் நிரந்தர முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல; தி.மு.க. தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காக என்றும் கூறினார்.

நீட் தேர்வு, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே அமலுக்கு வந்ததாகவும் குற்றம் சாட்டினார். நீட் தேர்வை திமுக காங்கிரஸ் கொண்டு வந்ததாக அ.தி.மு.க. தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறிவருகிறது. நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், இபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது. இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார். நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என்று சவால் விட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வு வரக்கூடாது என்பதற்காக அதிமுக எந்த அளவிற்கு சட்டப்போராட்டங்களை நடத்தியது என்று குறிப்பிட்டார்.

நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டபோது காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில்தான் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போடப்பட்டது. பிரதமரிடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதையும் கேட்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அதுவே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய காரணமாகி விட்டது என்றும் தெரிவித்தார்.

அது தெரியாமல் நீட் பற்றி விவாதம் நடத்த தயாரா என்று சவால் விடுகிறார். நேற்றைய தினம் காணொலி மூலம் பிரசாரம் செய்த போது நானும், ஓபிஎஸ் அவர்களும் நேரடியாக விவாதம் நடத்த முடியுமா என்று சவால் விடுகிறார் முதல்வர் அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். நீட் தேர்வு எந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது என்று கேட்டார்.

நீட் தேர்வு வருவதற்கு யாருடைய ஆட்சியில் நச்சுவிதை ஊன்றப்பட்டது என்று பொதுவான இடத்தில் விவாதிப்போம். நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம், அனைவரும் வரட்டும். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அரசியல் களத்தில் நீட் பற்றிய வார்த்தைப் போரினால் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *