வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர், கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்துள்ளார்.

காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தான் அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். போலீசார் தரப்பில் இருந்து, ‘மணிகண்டன் பாம்பு கடித்து இறந்திருக்கிறார்’ என விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இருப்பினும் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நேற்று முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை மற்றும் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இவற்றைத் தொடர்ந்து சந்தேக மரணம் 174 வழக்கு பதிவு செய்யப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவன் மணிகண்டனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உடலை வாங்காமல் கிராமத்திற்கு நேற்று திரும்பி சென்று விட்டனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டம், சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் டாஸ்மாக் கடைக்கு அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் போலீஸ் தாக்குதலால் இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரந்துள்ளார்.
இந்த செயலைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் கடும் கண்டம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு பொறுப்பு ஏற்ற 6 மாத காலத்திற்குள் தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், காவல் துறையின் மெத்தன போக்கை இந்த அரசு கண்டிக்க வேண்டும் எனவும், மேலும் உயிரழந்தவர்களின் குடும்பத்திற்க்கு அரசு உதவியும், ஒருவருக்கு வேலையும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.