• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தோழனுடன் வாழ ஆசைப்பட்டு 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்..,

ஹைதராபாத்- தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில், பள்ளித் தோழனுடன் வாழ ஆசைப்பட்டு தன்னுடைய மூன்று குழந்தை களுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியை சேர்ந்தவர் சென்னையா. இவரது மனைவி ரஜிதா(45). இவர்களுக்கு சாய்கிருஷ்ணா (12), மதுப்பிரியா (10), கௌதம் (8) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், சந்தித்த பள்ளித் தோழனுடன் வாழ ஆசைப்பட்டு சாய்கிருஷ்ணா , மதுப்பிரியா, கௌதம் ஆகிய மூன்று குழந்தைகளையும் ரஜிதா கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தைகளை கொன்ற பின்னர், ரஜிதாவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஜிதா தனது குழந்தைகளுக்கு இரவு உணவில் தயிரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரஜிதாவின் கணவர் சென்னையா, அசைவின்றி கிடந்த குழந்தைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனக்கு வயிறு வலிப்பதாக ரஜிதா கூறியதால், சென்னையா உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில், சென்னையாவைத்தான் போலீசார் சந்தேகப்பட்டனர். ஆனால் விரிவான விசாரணையில் குற்றவாளி ரஜிதா என்பது தெரியவந்தது.

ரஜிதா தனது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். அவர் படித்த பள்ளியில் சமீபத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அங்குதான் அவர் தனது பழைய நண்பரை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு இருவருக்கும் இடையே நட்பு வலுப்பெற்றது. இது விரைவில் காதலாக மாறியது. தனது பழைய நண்பருடன் வாழ வேண்டும் என்ற ஆசைக்கு குழந்தைகள் தடையாக இருப்பார்கள் என்று கருதியதால், மூன்று பேரையும் கொலை செய்ய ரஜிதா முடிவு செய்ததாக போலீசார் கூறுகின்றனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான் ரஜிதாவும் விஷம் அருந்தியதாக கருதப்படுகிறது.