கோவை அருகே முட்டத்துவயல் பகுதியில் 60 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மகன் மற்றும் மருமகளை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், முட்டத்துவயல் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (60). இவரது மகன் அனந்தபாபு (38), மருமகள் கல்பனா (29). அனந்தபாபுவின் திருமணம் தொடர்பாகத் தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்,

நேற்று இரவு பூண்டி வெள்ளிங்கிரி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கல்பனா, தனது மாமியார் மீனாட்சி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதையும், அருகில் அனந்தபாபு நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கல்பனா கேட்டபோது, தாய் திட்டியதால் மதுபோதையில் இருந்த தான் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டதாக அனந்தபாபு கூறியுள்ளார்.

மேலும், கொலைக்கான தடயங்களை மறைக்கும் நோக்கில் உயிரிழந்த மீனாட்சியின் ஆடைகளை கல்பனா அகற்றியிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இரவு சுமார் 9 மணியளவில், மீனாட்சியின் உறவினர்களுக்கு கல்பனா தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீனாட்சி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஆலாந்துறை காவல் ஆய்வாளர் முதற்கட்ட விசாரணை நடத்தினார்.

கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அனந்தபாபு மற்றும் கல்பனா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


