கோவை செட்டி வீதியில் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் பிஎஸ்ஜி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாமில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் தீப விவகாரம், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய வானதி சீனிவாசன், நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்துக்கு இது கிடைத்த வெற்றி என்றும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் ஆரம்பம் முதலே இந்தப் போராட்டத்தில் குரல் கொடுத்தவர் என்றும், அவரது ஆன்மா மகிழ்ந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் கார்த்திகை பௌர்ணமி அன்று தீபம் ஏற்றாமல் மாநில அரசு நீதிமன்றத்தை அவமதித்ததாக விமர்சித்த அவர், பல்வேறு காரணங்களைக் கூறி அதிகாரிகள் மூலம் நாடகம் நடத்தியதாகவும், பக்தர்களின் கோரிக்கையைப் புறக்கணித்து தமிழக அரசு மமதையுடன் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்துள்ளதாகவும், இந்தச் சூழலுக்கு தமிழகத்தை கொண்டு வந்து நிறுத்தியது ‘ரீல்ஸ் அரசாங்கம்’ என்றும் விமர்சித்தார்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டதும், நீதிமன்றம் கேள்வி எழுப்பியதும் பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய வானதி சீனிவாசன், பெண் அதிகாரிக்கே நீதி கிடைக்க இவ்வளவு தாமதமானால், சாதாரண பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார். முதல்வர் விஜய் கூறிய கருத்துகளையும் விமர்சித்த அவர், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறினார்.
ஆளும் கட்சி எம்எல்ஏ மீது கட்சி ரீதியாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் விமர்சித்தார். புகார் அளிக்க பெண்கள் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் அதிகரிப்பு மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் நிலவுவதாக குற்றம்சாட்டிய அவர், ‘தூய சக்தி’ எனக் கூறிக்கொள்ளும் தவெக ஊழல் குறித்து பேசுவதற்கு தகுதியற்றது என்றும் விமர்சித்தார். பெண் அதிகாரிக்கு ஆபாச செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் எம்எல்ஏ, ரத்தப் பரிசோதனை குறித்துப் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆபாச குறுஞ்செய்திக்கும் ரத்தப் பரிசோதனைக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தீபம் ஏற்றப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து பாஜக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார். தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் குறித்து பேசிய அவர், பல ஆண்டுகளாக பெண்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த உரிமை நடைமுறைப்படுத்தப்படும் நாள் நெருங்கியுள்ளதாகக் கூறினார். இந்த மசோதாவை முன்பு எதிர்த்தவர்களும் தற்போது ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

திமுகவின் ஆதரவுடன் வெற்றி பெற்றுவிட்டு, கட்சியை விட்டு விலகியவர்கள் திமுகவை துரோகம் என விமர்சிப்பது எப்படி என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், அரசியல் துரோகம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
இறுதியாக, தான் தேர்தலில் தோற்றாலும் வென்றாலும் மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.


