


தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில், தனியார் பள்ளியை யார் ? நிர்வகிப்பது என்ற தகராறில், பள்ளி தாளாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், பழனி செட்டிபட்டி பேரூர் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஒப்படை இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவுடன் தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறிய சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியை சேர்ந்த செல்வ மனோகரன்
என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெனடிக் என்ற பெயரில் தனியார் பள்ளி நடத்தி வந்தார். இந்த பள்ளியை C.E.O.A என்ற கல்வி நிறுவனம் 12 வருட லீசுக்கு வாங்கி நடத்தி வருகிறார்கள். தற்போது CEOA மேல் நிலைப் பள்ளியில், மதுரை ஆதி பராசக்தி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆணையர் ஸ்டாலின் மைக்கேல்(74) என்பவர் தாளாளராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் நேற்று முன் தினம், பள்ளி அலுவலகத்தில் உள்ள தாளாளர் அறையில் ஸ்டாலின் மைக்கேல் இருந்த பொழுது அங்கு வந்த செல்வ மனோகரன்(54), ஜெயராம் மகன் கிருஷ்ணன், ராஜா மகன் பாண்டீஸ்வரன் மற்றும் சிலர் அவரது அலுவலகத்தில் அத்துமீறி கம்பு, கத்தியுடன் நுழைந்து தாக்கியதாகவும், தடுக்க வந்த பள்ளி ஊழியர்களையும் தாக்கியதாகவும், பின்பு அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டாலின் மைக்கேல் கொடுத்த புகாரின் பேரில், பழனி செட்டிபட்டி போலீசார் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 191(2), 191(3), 329(4), 296(b), 115(2), 118(1), 351(3), 303(2)(NH) என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வ மனோகரன் மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி இருவரையும் கைது செய்தனர்.
சேர்மன் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்த போது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி கூப்பாடு போட்டுள்ளார். பின்னர் போலீஸார்கள் அவரை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் சிலரிடம் பேசினோம் …
சிஇஒஎ பள்ளி தகராறு சம்பந்தமாக சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் செல்வமனோகரன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஹார்ட் பிராப்ளம் ட்ரீட்மெண்ட் எடுக்கணும் என்று சொன்னதால் மருத்துவமனையில் இருக்கிறோம் என்றனர்.
தகராறில் நேரடியாக ஈடுபட்ட பழனிச்செட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி பெயர் எஃப்ஐஆர் இல் சேர்க்கப்படவில்லை. மிதுன் சக்கரவர்த்தி தன் செல்வாக்கால் எஃப் ஐ ஆர் ல இருந்து தன் பெயரை நீக்கினாரா? என்பது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது..,
தகராறில் அவர் நேரடியாக ஈடுபட்டது, எங்களுக்கு தெரியும். அவரது பெயரை எஃப்ஐஆர் இல் சேர்த்தால் காவல் நிலையத்தில் உள்ள அவரது விசுவாசிகள் சிலர் உடனடியாக அவருக்கு தகவல் சொல்லி விடுவார்கள். அவர் தலைமறைவாகி விடுவார், கைது செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதனாலேயே ரகசியமாக வைத்திருந்து கைது செய்தோம் என்று மட்டும் கூறினர்.

