• Sat. Apr 20th, 2024

கோவை உடன்பிறப்புகளை எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட, கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற கூடுதல் கவனம் தி.மு.க-விடம் இருக்கிறது.

காரணம், கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தி.மு.க கூட்டணியால் வெல்ல முடியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி வருகைக்கு பிறகு, கோவை மாவட்ட தி.மு.க சற்று உற்சாகமடைந்துள்ளது.


கடந்த காலங்களைவிட, தற்போது உடன்பிறப்புகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டுகின்றனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வாங்கியவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி மற்றும் சம்மந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் தான் நேர்காணல் செய்கின்றனர்.


இதில் உள்ளடி வேலை செய்பவர்களை நேரடியாக எச்சரித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. தேர்தல் நெருங்கும் நிலையில், கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார் என்பதுதான் உடன்பிறப்பிகளின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

கவுன்சிலர் முதல் மேயர் வரை அனைத்து வேட்பாளர்களையும் தலைமைதான் அறிவிக்கும்.” என்று செந்தில் பாலாஜி ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டார். இதனிடையே தலைமை எந்த அறிவிப்பும் கொடுப்பதற்கு முன்பே, நாங்கள்தான் மேயர் வேட்பாளர்கள் என்று சிலர் உலா வருகின்றனர்.

மாநில மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தான் மேயர் வேட்பாளர்” என்று முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம். சாமி என்பவர் ஒரு மேடையில் பேசிய வீடியோ வைரலாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தத் தேர்தலில், உள்ளடி வேலைகளுக்கோ சர்ச்சைக்கும் இடமில்லை என்பதில் செந்தில் பாலாஜி உறுதியாகவே இருக்கிறார். விருப்பமனு கொடுத்த அனைவரையும் அமர வைத்து நேர்காணல் செய்த செந்தில் பாலாஜி, “வேட்பாளரை தலைமைதான் அறிவிக்கும். ஒரு வார்டுக்கு 10 பேர் விருப்ப மனு கொடுத்தாலும்,

ஒருவர் தான் வேட்பாளராக முடியும் என்று எதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். சீட் கிடைக்கவில்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவர்களுக்கு அடுத்தடுத்து தேவையான விஷயங்கள் செய்து கொடுக்கப்படும்.


உதயசூரியன் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து உற்சாகமாக தேர்தல் பணிகளை கவனியுங்கள். சக நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக இருப்பது மிகவும் முக்கியம். இதையும் மீறி உள்ளடி வேலைகள் செய்பவர்கள், கடந்த காலங்களை போல தப்பிக்க முடியாது.
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும், பாரபட்சமின்றி அவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோவையை தி.மு.கவின் கோட்டையாக்குவது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *