• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குரோம்பேட்டையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது..,

ByPrabhu Sekar

Aug 18, 2026

சென்னை குரோம்பேட்டை அருகே M.I.T மேம்பாலம் கீழ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரபல வடமாநில கஞ்சா விற்பனையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

குரோம்பேட்டை பகுதியில் உள்ள M.I.Tமேம்பாலம் கீழ் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கைப்பைகளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்த நசிம் வயது 33 மற்றும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மஹாமுனி வயது 35 என்பது தெரியவந்தது. இருவரும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 22 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் போலீசார் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட மஹாமுனி மீது ஏற்கனவே பள்ளிக்கரணை மற்றும் சூளைமேடு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் இருப்பதும், கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குரோம்பேட்டை போலீசாரின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.