• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா..,

ByK Kaliraj

Aug 19, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா மற்றும் அலுவலர்களைப் பதவியில் அமர்த்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரும், விருதுநகர், TNGPA இலவசப் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளருமான குருசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவர் கணேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு, வாசிப்புப் பழக்கம், போட்டித் தேர்வுகள் மற்றும் தொடர்ச்சியான சுயகற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஊக்கமளிக்கும் சிறப்புரையை வழங்கினார். அவரது உரையைத் தொடர்ந்து, வினாடி வினா மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அவர், பல்வேறு பொது அறிவுக் கேள்விகளை மாணவர்களிடம் கேட்டார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

செய்தித்தாள்கள், புத்தகங்கள், இதழ்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் தங்களது அறிவை விரிவுபடுத்துமாறு அவர் மாணவர்களை ஊக்குவித்தார். மேலும், பல்வேறு வினாடி வினாப் போட்டிகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் நம்பிக்கையுடன் பங்கேற்குமாறும் அறிவுறுத்தினார். கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார். இது மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நிகழ்வின் முன்னதாக, வினாடி-வினா மன்ற ஒருங்கிணைப்பாளர் கீதா வரவேற்புரையாற்றி, வினாடி-வினா மன்றத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலர்களை அறிமுகப்படுத்தியதுடன், மன்றத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, கல்லூரி முதல்வர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார்.அவர்தமது உரையில், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் பொது அறிவு மற்றும் தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இளங்கலை கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி விஜயலட்சுமி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 92 மாணவர்கள் கலந்து கொண்டனர்.